Friday, October 30, 2009

நம்மோடு இல்லை தோழர் மோகன்


என்ன தோழர்... ஆபீசுக்கு எப்ப வந்தாலும் பனியனோடதான் உக்காந்துருக்கீங்க... சட்டை சேர்ல தொங்கிட்டு இருக்கு...
அழுக்காகலீன்னா நாளக்கி போட்டுக்கலாமே...

பத்தாண்டுகள் எம்.பி.யாக இருந்துவிட்டு நேற்று மாலை நம்மை விட்டுப் பிரிந்த மகத்தான தோழர் மோகனுக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடல் இது.

* * * * *

எம்.பியான புதிதில் அவரை தில்லியில் ஒருமுறை சந்தித்தேன். என்னுடன் வந்த நண்பர் முதன்முறையாக ஒரு எம்.பி.க்கு எதிரில் அமர்கிறார். காலில் இருந்த ஆணியை அகற்றிவிட்டு ஓய்வில் இருந்த தோழர்.மோகன், வெல்லக்கட்டியையும், நிலக்கடலைப் பருப்பையும் வைத்து எங்களை உபசரித்தார்.

வெல்லத்தை வாங்க அவர் பட்ட சிரமத்தையும் சொன்னார். அப்போதுதான் அவர் எம்.பி.யாகியிருந்தார். வெல்லம் வாங்க கடைக்குச் சென்றிருக்கிறார். இந்தியில் எப்படி கேட்பது என்று தெரியவில்லை. கடைகளுக்குள் புகுந்து தேடியுள்ளார். அதைக்காட்டியாவது வாங்கிவிடலாம் என்று பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. கடைசியில் தமிழிலேயே கேட்பது என்ற முடிவுக்கு வந்த அவர், வெல்லம் குடு என்றிருக்கிறார்.
உடனே வெல்லம் வந்துவிட்டது. அரைக்கிலோவை வாங்கிவிட்டுத் திரும்பியவருக்கு ஒரே ஆச்சரியம். தமிழில் கேட்டால் எப்படி அவர்களால் கொடுக்க முடிந்தது என்ற கேள்வி அவரைப் பல நாட்கள் வலம் வந்து கொண்டிருந்தது. கூ(g)ட்(d) என்றே வட இந்தியாவில் வெல்லத்தை அழைக்கிறார்கள் என்று பிறகுதான் அவருக்கு தெரிய வந்தது. சொல்லி சொல்லி சிரித்தார். அந்த சிரிப்பு, மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும்போது அவரது கண்களில் இயல்பாகவே எழும் அனுதாபம் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. வந்து கொண்டேதான் இருக்கும்.

* * * * * *

ஒரு முறை குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருக்கிறோம். மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்ட நேரமது. அழகிரி வெற்றி பெற்று விட்டார். எனது மனைவியின் தங்கை அப்போது குறிப்பிட்டார். பிரச்சாரத்துக்கு வராம உங்க மோகன் வேணும்னேதான் ஆஸ்பத்திரில போய்ப் படுத்துட்டாருன்னு பேசிக்குறாங்களே... என்றார். வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அவருடைய கணவரும் தலையை ஆட்டி ஆமோதித்தது போல் தெரிந்தது. அப்படில்லாம் இல்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றேன். பெரும்பாலான அரசியல்வாதிகள் கொள்ளைக்காரர்களாகவே திரிவதால் அரசியல்வாதியைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே மக்கள் நம்பி விடுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால் தான் நிரபராதி என்று காட்டுவதற்கு இவ்வளவு வலுவான சாட்சியத்தை நம்முன் கொண்டு வந்து தோழர்.மோகன் நிறுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. போயே விட்டார். எந்த நோய்க்காக தேர்தல் பிரச்சாரத்திற்காக வரமுடியாமல் மருத்துவமனையில் படுத்தாரோ, அதே நோயின் கொடுரத்தைத் தாங்க முடியாமல் சென்றுவிட்டார். எந்த வாய்கள் எல்லாம் அவரைத் தூற்றினவோ, யாரெல்லாம் அந்தத் தூற்றுதலை நம்பினார்களோ அவர்களெல்லாம் தோழர்.மோகனிடம் போய் சொல்லவா முடியும்... உங்களை நாங்கள் நம்புகிறோம் என்று.
* * * * * *

Thursday, October 29, 2009

66வது கொலை விழுந்துவிட்டது!

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நாளிலிருந்து இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 65 பேர் மாவோயிஸ்டுகள் மற்றும் எதிர்க்கட்சியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுத்தபோதுகூட ரத்தம் சிந்தாமல்தான் அந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்பதில் மேற்கு வங்க மாநில அரசு கவனமாக இருந்தது.

அறிவுஜீவிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் மாவோயிஸ்டுகளின் மீதான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களைக் போல சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து கொலை செய்யப்படுபவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அங்கீகரிக்கவோ அல்லது யாராக இருந்தாலும் வன்முறையில் இறங்கக்கூடாது என்று பொதுவாகச் சொல்லவோ அவர்கள் தயாராக இல்லை.

இதோ மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் 66வது கொலை விழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஊடகங்களின் ஒரு பகுதியினரும் பாரபட்சமாகவே செய்தி வெளியிடுகிறார்கள். ஜார்க்கண்டில் தாக்குதல் நடத்துபவர்கள் மாவோயிஸ்டுகளாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடத்துபவர்கள் பழங்குடி மக்களாம். தாக்குதல் நடத்துபவர்கள் அனைவரும் ஒரே அமைப்புதான். கண்ணை மூடிக்கொண்டு செய்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

Tuesday, October 27, 2009

ஆலய நுழைவில் அரசியல் நுழைவா...?


“ஆலய அரசியலில், நுழைவு அவசியமா?” என்ற தலைப்பில், இரா.சோமசுந் தரம், தினமணி நாளேட்டில், அக்டோபர் 27ல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். எந்த ஆல யத்திலும் தலித்துக்கள் நுழையக் கூடாது என்று சொல்வதைப் போன்ற காட்டுமிராண் டித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்ற பீடிகையோடு இந்த கட்டுரை துவங்கு கிறது. ஆகா, சமூகநீதிக்காக குரல்கொடுக் கிறார், சோமசுந்தரம் என்ற மகிழ்ச்சியோடு கட்டுரைக்குள் நுழைந்தால், அன்றைக்கு பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஆலய நுழை வுப் போராட்டம் நடத்தியது சரிதான், இன் றைக்கு அரசு நம்முடையது; இந்து அறநிலை யத்துறை கோயில்களில் தலித்துக்கள் நுழை யத் தடை எதுவும் இல்லை; இந்நிலையில், தனியார் அல்லது ஒரு சமூகத்திற்கு சொந்த மான கோயில்களில், தலித்துக்களை அனு மதிக்காததற்காக கம்யூனிஸ்டுகள் போரா டுவது, சரிதானா; இது, அரசியல் சாயம் பூசப்பட்டது அல்லவா? என்று அடுக்கிக் கொண்டே சென்று, தனியார் அல்லது ஆதிக்க சமூகத்தினரால் நடத்தப்படும் கோயில்களில், தலித்துக்களை அனுமதிக்கா ததை நியாயப்படுத்துகிறார், கட்டுரையாளர். இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன், “அழ காக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ” என்பார்.

தனியார் நிறுவனங்கள் போல, தனியார் கோயில்களும் இருக்கலாம் போலிருக்கிறது. அத்தகைய கோயில்களில், சாதியின் பெய ரால், ஒருபகுதி மக்கள் இழிவுசெய்யப்பட் டால் அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது, என்பது சோமசுந்தரத்தின் வாதம். அப்படி பிரச்சனை இருந்தால், அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் செய்து, நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா? என்று ரொம்பவும் நல்லவர் போல கேள்வி எழுப்புகிறார், இவர். காங்கியனூரிலோ அல்லது செட்டிப்புலத் திலோ, எடுத்தவுடனேயே தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தவில்லை. அரசு அலுவலகங்களின் கதவுகளை பலமுறை தட்டி பலன் கிடைக்காத நிலையிலேயே, அரசின் கவனத்தை ஈர்க்க கோயில் கதவுகள் நேரடியாக தட்டப்பட்டன. காங்கியனூர் திரௌபதியம்மன் கோயி லில் தீமிதி விழாவின் போது தலித்துக்கள் யாரும் நுழையக்கூடாது என்று ஒலிபெருக்கி யிலேயே பகிரங்கமாக அறிவிக்கப்படும்; ஒலி பெருக்கிக்கும் அதை அறிவிப்பவருக்கும் சேர்த்தே காவல்துறை பாதுகாப்பு தரும். தீண் டாமையை எந்த வகையிலேனும் கடைப் பிடிப்பது, கிரிமினல் குற்றம் என்கிறது, அரசி யல் சாசனம். ஆனால், அதை மீறுபவர் களுக்கு, காவல்துறை பாதுகாப்பு தரும் நிலை.

உடல் முழுவதும் காணப்பட்ட புண் குண மாகி விட்டதாம். தற்போது சிறுபுண் மட்டுமே உள்ளதாம். அதற்கு மருத்துவ சிகிச்சை செய்யாமல், அதை ஆவேசமாக சொறிந்து புண்ணாக்குவது சரிதானா, என்று இவர் கேட்கிறார். இவர், எந்த உலகத்தில் வாழ் கிறார் என்று தெரியவில்லை. இன்னமும் கூட தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கிராமங்களில், பொது கிளாசில் டீ குடிக்க தடை; செருப்பு போட்டு நடக்கத் தடை; சைக்கிளில் செல்லத் தடை; தோளில் துண்டு அணியத் தடை; இவ்வளவு ஏன், பொதுக்கழிப்பறையை பயன்படுத்தக் கூட தடை; தலித் மக்கள் ஆண்நாய் வளர்க்கத் தடை என தீண்டாமைக் கொடுமை தலை விரித்து ஆடுகிறது. இவையெல்லாம் சிறு புண்ணாகத் தெரிகிறது இவருக்கு. ஆனால், சமூகத்தையே அரித்துத் திண்ணும் புற்றுநோ யாக தெரிகிறது கம்யூனிஸ்டுகளுக்கு! இத னால்தான் அரசிடம் சொல்லி நடக்காத இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டம் போன்றவற்றை கம்யூனிஸ்டுகள் நடத்து கிறார்கள். இது அரசியல் சாயம் என்றால், இதை இன்னும் அழுத்தமாக்கவே, அவர்கள் விரும்புகிறார்கள்.

செட்டிப்புலம், காங்கியனூரில் அமைதி குலைந்திருப்பதாக, கட்டுரையாளர் கவலைப் படுகிறார். சாதி ஆதிக்க வெறியால் செயற் கையாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் மயான அமைதியை கலைப்பதே நல்லது. இப்படி கலைத்ததால்தான் செட்டிப்புலத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தலித்துக்கள் ஆல யப் நுழைவு செய்ய முடிந்திருக்கிறது. காங் கியனூரிலும் அரசை அசைக்க முடிந்திருக் கிறது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத் தில் தலித் தலைவர்களை பதவியேற்கச் செய்ததிலும், உத்தப்புரம் சாதிச்சுவரின் ஒருபகுதியைத் தகர்த்ததிலும், பந்தப்புளி, கல் கேரி உள்பட பல்வேறு கோயில்களில் தலித் துக்கள் நுழைய முடிந்ததிலும், கம்யூனிஸ்டு களின் “அமைதிக் குலைப்பு” முக்கியப் பங்கு வகித்துள்ளது.

போராட்டங்கள் நடத்த, தமிழகத்தில் பிரச் சனைகளா, இல்லை...? என்று கேட்டுவிட்டு, தனியார் பள்ளி- கல்லூரிகளில் நடைபெறும் அநியாய கல்விக் கட்டணத்திற்கு எதிராக போராடி ரத்தம் சிந்தக் கூடாதா? என்று கட் டுரையாளர் கேட்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, இந்திய மாணவர் சங்கத்தினர், தனியார் கல்வி நிறுவனங்க ளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், சமச்சீர் கல்விக்காகவும் போராடி ரத்தம் சிந் தியபோது, சோமசுந்தரம் கையெடுத்துத் தொழுதிருக்க வேண்டாம்; மாணவர்களை ஆதரித்து ஒரு கட்டுரையாவது எழுதியிருக் கலாமே! உணவுக்காகப் போராடினால் கம்யூனிஸ் டுகளை தமிழகம் கையெடுத்து தொழுமே... என்று கூறியுள்ளார். சென்னையில் உணவுப் பாதுகாப்பிற்காக இடதுசாரிகள் இணைந்து கருத்தரங்கம் நடத்தினார்கள். நவம்பர் 17ல் சிறைநிரப்பும் போராட்டத்தையும் நடத்த உள்ளனர். இதில் சோமசுந்தரம் முதல் ஆளாக நின்று பங்கேற்பார் என எதிர்பார்க்கலாம்.

அரசு ஊழியர் சங்கத்தில் உள்ள தங்கள் தோழர்களை, மக்கள் நலப்பணிகளில் ஈடு படுத்தலாமே என்றும் கூறுகிறார். இடதுசாரி மனோபாவம் கொண்ட அரசு ஊழியர்கள், இரத்ததானம்; ஏழை- எளிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க இலவசப் பயிற்சி என பல்வேறு வழிகளில் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் பணியிடங்களில் மக்கள் நலனை பாதுகாப்பதில் அவர்கள் முன்னிற்கிறார்கள். ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவ தால், தலித்துக்களின் வாக்கு கம்யூனிஸ்டு களுக்கு கிடைக்காது என்று கடைசியாக சாபமிட்டுள்ளார், கட்டுரையாளர். இது வாக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் இயக்கமல்ல; எதிர்காலப் போக்கு சமத்துவ சமுதாயத்தை நோக்கி இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் இயக்கம்.

மார்க்சிஸ்ட் கட்சி போன்று பிற கட்சிகளும் ஏன் சமூகநீதிக்காகப் போராடவில்லை என்று சோமசுந்தரத்தின் எழுதுகோல் கேட்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். தீண்டாமையை கடைப்பிடிப் பவர்களிடமிருந்து, வாக்குகள் கிடைக்காது என்று பல கட்சிகள் இந்த பிரச்சனைக்குள் நுழைவதே இல்லை என்பதுதான் உண்மை. மதம் ஒரு அபின் அல்லவா.. என்று கேட்டு முடித்திருக்கிறார். மாமேதை மார்க்ஸ் சொல்வதை, முன்னும் பின்னும் கத்தரித்து விட்டு, பலரும் பயன்படுத்துவதைப் போலவே, இவரும் கூறியிருக்கிறார். மதம் அடக்கப்பட் டவர்களின் பெருமூச்சு என்றும் மார்க்ஸ் கூறியிருக்கிறார். எல்லோருக்கும் பொது வானது என்று கதைக்கப்படும் கோயிலுக்குள் நுழைய முடியாமல் உழைக்கும் மக்கள் பெரு மூச்சு விடும்போது, அதை புயலாக மாற்று வதே கம்யூனிஸ்டுகளின் அரசியல் பணி.

- மதுக்கூர் இராமலிங்கம்

Monday, October 26, 2009

மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை தீருமா..?



ச்சீ...ச்சீ... என்று மலத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுளித்தவாறு நகர்ந்து விடுவார்கள் பெரும்பாலான மனிதர்கள். ஆனால் அதையும் மனிதர்கள்தான் பெரும்பாலும் அள்ளிச் சென்று அப்புறப்படுத்தும் அவல நிலை உள்ளது. இத்தனைக்கும் கையால் மலம் அள்ளுவதை சட்டம் தடை செய்துள்ளது. 1993 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கையால் மலம் அள்ளுவோர் பணி நியமனம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள்(தடுப்பு) சட்டம் சில மாற்றங்களை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் பெரும்பாலும் அந்தக் கொடுமை இன்னும் நடைமுறையில் உள்ளது.


மத்திய சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 6.7 லட்சம் மலம் அள்ளுபவர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இது 2003 ஆம் ஆண்டு தந்த புள்ளிவிபரமாகும். ஆனால் இதுவரை இதில் எத்தனை பேருக்கு மாற்றுப் பணிகள் தந்து மலம் அள்ளும் பணியிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளார்கள் என்ற விபரங்கள் இல்லை. உலர் கழிப்பிடங்கள் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தை நோக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அடிகளை எடுத்து வைப்பதில் முனைப்பு இல்லை.


2007 ஆம் ஆண்டுக்குள் இதை முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு லட்சுமணன் கோடு ஒன்றையும் போட்டது. கோடு அழிந்ததுதான் மிச்சம். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், மனிதக்கழிவை மனிதனே அள்ளும் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்து, அதில் ஈடுபடுபவர்களுக்கு மாற்றுப் பணிகள் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. 2006-07 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 11 ஆயிரத்து 691 பேருக்கு மாற்று வேலைகளுக்கான பயிற்சி தர 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்ற அறிவிப்பும் வெளியானது.


ஆனால் அடிப்படையான பிரச்சனையைத் தீர்க்காமல் மேற்பூச்சு வேலைகளால் எந்த பலனும் இல்லை. 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்குப்படி, தமிழகத்தில் உள்ள 1.41 குடும்பங்களில் சுமார் 92 லட்சம் குடும்பங்களின் வீடுகளுக்குள் கழிப்பறைகள் இல்லை. சுமார் ஆறரை லட்சம் உலர் கழிப்பிடங்கள் உள்ளதாகவும் அந்தப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலர் கழிப்பிடங்கள் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இருக்கும் வரையில் அதை அள்ளுவதற்கான ஆட்களைத் தேடும் நிலை நிற்காது.


இந்தியாவில் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் தண்டவாளங்களுக்கு நடுவில் கிடக்கும் மலத்தை அள்ளிச்சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். எது, எதற்கோ நவீன கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அசிங்கம் என்று கருதப்படும் மலத்தை அள்ளத்தான் கருவிகளைக் கண்டுபிடிக்க மாட்டேனென்கிறார்கள்.


இத்தகைய கொடுரங்களுக்கு எதிராக, வெறும் காகிதத்தில் இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துக என்ற அக்.27 பேரணி முழக்கம் ஆட்சியாளர்களின் காதுகளில் போர்ப்பறையாக ஒலிக்கவிருக்கிறது.

0.16 சதவிகிதம்தான் பத்தாம் வகுப்பைத் தாண்டியவர்கள்!


தமிழகத்திலுள்ள துப்புரவுத் தொழிலாளர்களில் 95 சதவிகிதம் பேர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். அதிலும் 33 சதவிகிதம் பெண்கள்தான். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மற்ற சாதியினரின் தயவில்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். பத்து சதவிகித அருந்ததியர்கள் கையில்தான் சிறிய அளவிலாவது நிலம் உள்ளது.

கல்வி ரீதியாகவும் இந்த சமூகத்தினர் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் அளிக்கும் புள்ளிவிபரங்களின்படி, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் 1.75 சதவிகிதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். 0.16 சதவிகித அருந்ததியர்கள் மட்டுமே பத்தாம் வகுப்பைத் தாண்டியுள்ளனர்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான கிராமப்புற சிறுவர்கள் வயல்களில் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். நகர்ப்புறங்களில் ஓட்டல்கள் போன்றவற்றில் கூலி வேலைகள் செய்பவர்களாகவும் உள்ளனர். ஒருவேளை, பத்தாம் வகுப்பை முடித்து விட்டாலும் மேற்கொண்டு படிப்பதற்கு போதிய பொருளாதார வசதி அவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அருந்ததிய அமைப்புகளின் வலுவான இயக்கத்தால் இந்த சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

இதை முறையாக நடைமுறைப்படுத்தக்கோரும் மக்களின் எழுச்சிக்குரல்கள் அக்.27 அன்று கோட்டையின் கதவுகளை தட்டப்போகின்றன.

Saturday, October 24, 2009

அணுகுண்டா... இது வீண் பழியே...!


வெனிசுலாவில் யுரேனியம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள் என்ற செய்தி வெளியானவுடனேயே ஈரானுக்கு யுரேனியத்தை வெனிசுலா ஏற்றுமதி செய்யப்போகிறது என்றும், சொந்தமான அணுகுண்டைத் தயாரிக்க வெனிசுலா திட்டமிட்டுள்ளது என்றும் மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடத் துவங்கிவிட்டன. அந்த யுரேனியம் பயன்படுமா இல்லையா என்பது பற்றியெல்லாம் கூட இன்னும் ஆய்வுகள் முடியவில்லை. இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று சாவேசை கேள்வி கேட்டும் பத்திரிகையாளர்கள் துளைத்து எடுத்து விட்டார்கள்.

அவருடைய பதில் மிகவும் தெளிவாக இருந்தது. "அணுகுண்டை வெனிசுலா ஒருபேதும் தயாரிக்காது. அடுத்தவர்களைக் குறை சொல்லி தங்களை வளர்த்துக்கொள்ள விரும்பும் நாடுகள் இத்தகைய பொய்ப்பிரச்சாரத்தை செய்கின்றன. யுரேனியத்தை நாங்கள் தவறாகப் பயன்படுத்தப்போவதாக மேற்கத்திய ஊடகங்கள் எங்களைக் குறை சொல்லப் போகின்றன. இப்பொழுதுதான் யுரேனியம் எங்கள் மண்ணில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். அதற்குள்ளாக எங்கள் நாட்டுக்கெதிரான பிரச்சார யுத்தத்தை துவக்கி விட்டார்கள். ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தாண்டி மின்னுற்பத்தி போன்ற மிக முக்கியமான பணிகளை நாங்கள் செய்து கொள்ள முடியும்" என்றார் அவர்.

தங்களிடமிருக்கும் யுரேனியத்தை பயன்படுத்தும் வித்தையைக் கற்றுக் கொடுங்கள் என்று ரஷ்யாவிடம் வெனிசுலா கேட்கப்போகிறது. தென் அமெரிக்க நாடுகள் இந்தியா, ரஷ்யா, சீனா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி வருகின்றன. தனது பிடி பெரும் அளவில் நழுவியுள்ளதால் மீண்டும் இறுக்கிப்பிடிக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் முதல்கட்டமாகத்தான் இருக்கும் ஒன்றிரண்டு கூட்டாளிகளில் கொலம்பியாவில் புதிய ராணுவத்தளங்களை அமைக்கிறது. தனது இந்த நடவடிக்கைகளை மறைக்கவே வெனிசுலாவின் அணுகுண்டு என்ற புரளியைக் கிளப்பி விட்டுள்ளது.

மேலும், சாவேஸ் தலைமையிலான வெனிசுலா அரசு அமெரிக்காவின் ஒவ்வொரு தலையீட்டையும் கடுமையாகக் கண்டித்து வருகிறது. ஒபாமாவுக்கு சமானத்திற்கான நோபல் பரிசு வழங்கியதை விமர்சித்த அவர், கொலம்பியாவில் ஏழு ராணுவத்தளங்களை அமைக்கப்போகிறோம் என்பது அவரின் நினைவுக்கு வருவது நல்லது என்றார். அதோடு நிற்காமல் தென் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காகவும் வெனிசுலா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தங்களுக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ள சுக்ரே என்ற புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தப்போவது இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும். டாலருக்கு மாற்றாகக் கிளம்பியுள்ள இந்த புதிய நாணயம் அமெரிக்காவுக்கு பீதியைக் கிளப்பியுள்ளது.
அண்மையில் நடந்த அல்பா(தென் அமெரிக்க நாடுகளுக்கான பொலிவாரிய மாற்று) அமைப்புக்கூட்டத்தில் பல அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை நிறைவேற்றாத நாடுகளை கூண்டுக்குள் ஏற்றி விசாரிக்கும் வகையில் ஒரு பருவநிலை மாற்றம் குறித்த நீதிமன்றத்தை அமைக்க அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் அல்பாஎக்சிம் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றையும் தென் அமெரிக்க நாடுகள் இணைந்து துவக்கியுள்ளன. பரஸ்பர நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அந்த நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் நடப்பதை இந்த நிறுவனம் உறுதிப்படுத்தும்.

கடந்த நூற்றாண்டில் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளால் பிரிந்து கிடந்த தென் அமெரிக்க நாடுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு அணி திரண்டுள்ளார்கள். அமெரிக்காவின் புழக்கடை போன்று தங்கள் நாடுகளை நடத்துவதை இனி ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியை அவர்கள் எடுத்துள்ளார்கள். இது வெறும் ஆட்சியாளர்களின் ஆசையல்ல. ஒட்டுமொத்த தென் அமெரிக்க மக்களின் விருப்பமாகும். இதனால்தான் பிரித்து வைக்கும் முயற்சியில் வெனிசுலாவில் யுரேனியம் கிடைக்கிறது என்றவுடனேயே அணுகுண்டு வதந்தியைப் பரப்புகிறார்கள். யுரேனியத்தில் வெனிசுலா விஞ்ஞானிகளே இன்னும் கை வைக்கவில்லை. அதற்குள் ஈரானுக்கு கப்பலில் யுரேனியம் கிளம்பிவிட்டதாக கதை கட்டுகிறார்கள்.

Friday, October 23, 2009

"வளர்ச்சி"க்காக வளர்ச்சியை சிதைக்கும் மாவோயிஸ்டுகள்!



மாவோயிஸ்டுகளின் வன்முறை நடவடிக்கைகளையும் தாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறிக்கொண்டாலும், அவர்களுக்கு ஆதரவாக திரண்டுள்ள சில அறிவுஜீவிகள் அந்த வன்முறைகள் நிகழும்போதெல்லாம் மவுனம்தான் சாதிக்கின்றனர். நாட்டிலுள்ள 625 மாவட்டங்களில் 161 மாவட்டங்களில் இயங்கி வரும் இந்த மாவோயிஸ்டுகள் கடந்த பத்து மாதங்களில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்துள்ளனர். வளர்ச்சிப்பணிகளை அரசுகள் செய்திருந்தால் இந்த வன்முறைகள் நிகழ்ந்திருக்காதே என்று அவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.


வளர்ச்சிப்பணிகள் நடைபெறவில்லை என்ற மாவோயிஸ்டுகளின் குற்றச்சாட்டு ஒருபுறம். மறுபுறத்தில் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகளை தரைமட்டமாக்கும் வேலையை மாவோயிஸ்டுகள் செய்கின்றனர். ரயில்வே தண்டவாளங்கள், தொலைபேசிக் கோபுரங்கள், மின்னுற்பத்தி நிலையங்கள், கனிம சுரங்கங்கள், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் ஆகியவற்றைத் தகர்த்து எறிகிறார்கள்.


2009 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய இடங்களைக் குறிவைத்து 183 வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எந்த மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, அந்த மக்களுக்கான பள்ளிக்கூடங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் ஆகியவைதான் இந்த வன்முறைத் தாக்குதல்களின்போது குறிவைக்கப்பட்டன. மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மக்கள் பணத்திலிருந்தே இந்தக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வேலையையே செய்கின்றன.


இவர்கள் தாக்குதல்கள் நடத்தும் பகுதிகளில் நூறு நாள் வேலைத்திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. சில மாநிலங்களில் இந்தத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட பல்வேறு பணிகள் மாவோயிஸ்டுகளால் சிதைக்கப்பட்டன. அரசை ஸ்தம்பிக்கச் செய்கிறோம் என்று இவர்கள் நடத்தும் வளர்ச்சிக்கு எதிரான வன்முறைகளை இவர்களுக்கு ஆதரவாக இயங்கும் அறிவுஜீவிகள் கண்டுகொள்வதேயில்லை.


இவர்கள் "வளர்ச்சி" என்று சொல்வது மாவோயிஸ்டு அமைப்பின் வளர்ச்சியைப் பற்றியதாக இருக்குமோ...?