Tuesday, September 22, 2009

கால்பந்து சங்கத்தலைவரானார் அத்வானி!



நரேந்திர மோடி குஜராத் கிரிக்கெட் சங்கத்தலைவராகத் தேர்வு - செய்தி.


இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஒருவரையொருவர் மிஞ்ச வேண்டும் என்ற ஆசை எழுவது இயல்புதானே... இதோ ஒரு கற்பனை.

கால்பந்து சங்கத்தலைவரானார் அத்வானி

ஏற்கெனவே தன்னைவிட மேலானவராக மோடியை சொந்தக் கட்சிக்காரர்களே சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வளவு நாள் அரசியலில் இருந்துவிட்டு ஒரு விளையாட்டுச்சங்கத்திற்குக் கூட தலைவராகவில்லையே என்று எதிர்கோஷ்டி பிரச்சனை எழுப்பிவிடக்கூடாது என்பதற்காக கால்பந்து சங்கத்திற்கு தலைவராகி விட்டார் அத்வானி. ராமர் கால்பந்து விளையாடிய இடங்களாகத் தேர்வு செய்து 108 இடங்களில் மசூதிகளும், சர்ச்சுகளும் எழுப்பப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார். ஜின்னாவும், தானும் ஒருமுறை கால்பந்து ஆடியதை மிகவும் நெகிழ்ச்சியுடன் அத்வானி குறிப்பிட்டார்.
--------------

மாஜிக் கலைஞர்கள் சங்கத்தலைவராக பிரணாப்


நூறு நாளில் அதை வரவழைக்கிறேன், இதை வரவழைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே மக்களை மயக்கிய பிரணாப் முகர்ஜி மாஜிக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகியுள்ளார். வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டே தனது மாஜிக் தொப்பியிலிருந்து ஆட்குறைப்பு, பணிநீக்கம், சம்பள வெட்டு, விலைவாசி உயர்வு என்று அவர் எடுத்துவிடும்போது பிரமிப்பாகத்தான் இருக்கும். தன்னை விட புதிய தலைவர் நன்றாகவே ஏமாற்றுகிறார் என்று முன்னாள் தலைவரும், மாஜிக் கலைஞருமான ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.
----------------

கண்ணாமூச்சி விளையாட்டு சங்கத்திற்கு அழகிரி தலைவர்


தில்லியில் தனது துறை அதிகாரிகள் தேடிக் கொண்டிருக்கையில், இதோ, இதோ என்று சொல்லிக்கொண்டே மதுரையிலேயே பதுங்கி தனது கண்ணாமூச்சித் திறமையை வெளிக்காட்டிய அழகிரி அந்த விளையாட்டின் நிர்வாகத்தையே எடுத்துக் கொண்டுள்ளார். தனது கண்ணாமூச்சி விளையாட்டுக்கு ஐடியா கொடுத்தால் அவர்களுக்கு சங்கத்தில் பொறுப்பும் தரப்போகிறார். இதேபோல் கண்ணாமூச்சி காட்டிய முன்னாள் ஆட்டக்காரர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். மறைந்து கொள்ளும் நேரத்தை நீட்டிக்கொள்வது எப்படி என்று கேட்கத்தான் அந்தத் தேடுதல்.

---------------
தடகளச் சங்கத்தலைவராக சு.சாமி முயற்சி

செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சனை பண்ணி விரட்டியடிக்கப்பட்டு ஓடிக்கொண்டேயிருக்கும் அனுபவத்தால் தடகளச் சங்கத்திற்கு தலைவராகலாம் என்று சுப்பிரமணிய சுவாமிக்கு ஆசை வந்துள்ளது. தனது ஆசை நிறைவேற ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும் பாஜகவில் சேரப்போகிறார். காந்தஹார் வரை ஓடிய ஜஸ்வந்த்சிங் இல்லாததும், பேட்டி என்றால் ஓட்டமாய் ஓடும் வெங்கய்யா நாயுடு அடக்கி வாசிப்பதும் இந்தப்பதவிக்கு போட்டியிருக்காது என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

Thursday, September 17, 2009

அக்கா மாலாவையும், கப்சியையும் ரசிக்கலையா..?

பணத்தை அதிகமாகக் கொட்டி எடுக்கிறார்களோ அல்லது சிக்கனமாக எடுக்கிறார்களோ, தாங்கள் பார்க்கும் படங்களில் மருந்துக்காவது கதை இருக்கிறதா என்று ரசிகர்கள் பார்க்கும் காலமிது. இதனால் கதையைத் தேடி அலையும் திரைப்படத் துறையினர், புதிதாக எதுவும் கிடைக்காவிட்டால் பழைய கதையை மாற்றிப் போட்டாவது ஏதாவது பண்ணி விடலாமா என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பெரும் ஆரவாரத்துடன் வெளிவந்துள்ள கந்தசாமி திரைப்படத்தின் தோல்வியும் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் யோசிப்பதற்காக ரூம் போடச் செய்துள்ளது. புதிதாகக் கதையைத் தேடுவானேன் என்று நினைத்த இயக்குநர் பி.வாசு ஏதாவது ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து விடலாமே என்று ரூம் வாடகையை மிச்சம் பிடிக்கத் திட்டமிட்டார்.

அவருக்கு உடனே தோன்றியது சந்திரமுகி படம்தான். ரஜினிகாந்தையே அதில் நடிக்க வைத்து விடலாம் திட்டமிட்டார். அவரோ எனக்காகக் காத்திராமல் வேறு கதையை எடுக்கலாமே என்று கூறிவிட்டாராம். மீண்டும் கதையைத் தேடத் தொடங்கி விட்டார் பி.வாசு. இவரைப்போல பலரும் கதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் நாலு சண்டை, நாலு பாட்டு போதும் என்றிருந்த காலம்போய் இப்படியொரு காலம் வரும் என்பதை பலர் எதிர்பார்க்கவில்லை. மக்கள் விரும்புவதால்தான் மசாலாப்படங்களை எடுக்கிறோம் என்று சவடால் விட்டுக் கொண்டிருந்த பல இயக்குநர்களுக்கு புதிய சூழல் சவாலாக உருவாகியுள்ளது. கதைக்கா பஞ்சம்... ஹாலிவுட்காரர்கள் பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து படத்தை எடுத்து, முதலாளித்துவம் - ஒரு காதல் கதை என்று கிண்டலாகவும் பெயர் வைத்துவிட்டார்கள்.

கதைகளை வீடுகளுக்குள்ளும், குடும்பங்களுக்குள்ளும் புகுந்து திருடிக் கொண்டு வருவதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு சமூக நிகழ்வுகளை, நாட்டு நடப்புகளைப் படமாக்கலாமே... அக்கா மாலாவையும், கப்சியையும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் மக்கள் ரசித்துப் பார்த்தார்களே...?

ஆந்திரா : அம்பலமாகும் தற்கொலை மோசடிகள்

ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர்ரெட்டி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஆந்திராவில் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் மெயில் டுடே பத்திரிகை சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதில் பலர் இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது தெரிய வந்தது. செப்.3 அன்று ராஜசேகர்ரெட்டியின் உடல் கிடைத்ததாக செய்தி வெளியாகியது. அப்போதிருந்து தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் நடந்ததாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சிலருக்கு அதில் சந்தேகங்கள் எழுந்தன. விசாரித்ததில் அந்த சந்தேகங்கள் சரிதான் என்று தெரிய வந்துள்ளது.

யாராவது இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் உள்ளுர் காங்கிரஸ்காரர்கள் அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து பணம் கொடுத்து ராஜசேகர்ரெட்டி இறந்த அதிர்ச்சியில்தான் அவர் இறந்தார் என்று சொல்லச் செய்துள்ளனர். ஒரு சம்பவத்தில் மாநில அமைச்சர் ஒருவரே நேரிடையாகத் தலையிட்டார் என்று கூறப்படுகிறது. மறைந்த முதல்வரைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைத் தோன்றச் செய்யவும், ஜகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகளை அதிகப்படுத்தவுமே இத்தகைய செய்திகள் மோசடியாகப் பரப்பப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு ஒவ்வொரு மணி நேரமும் உயிரிழப்புப் பட்டியலை வழங்கிக் கொண்டே இருந்தது.

அவர்களின் கடைசி பட்டியலின்படி மொத்தம் 462 பேர் உயிரிழந்தனர். அதில் 402 பேர் மாரடைப்பாலும், 60 பேர் தற்கொலை செய்தும் மரணமடைந்தனர். அவர்கள் அளித்த புள்ளிவிபரங்களின்படி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்தான் அதிகம் பேர் இறந்தனர். அங்கு 58 பேரும், வாரங்கல்லில் 48 பேரும், கரீம்நகரில் 46 பேரும் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். வாரங்கல் மாவட்டத்தில் மெயில் டுடே பத்திரிகை மேற்கொண்ட ஆய்வு, சுமார் ஐந்தாயிரம் ரூபாய் வரை இறுதிச்சடங்களுக்காக காங்கிரஸ்காரர்களால் தரப்பட்டது என்பதும், அதற்குப்பதிலாக ராஜசேகர்ரெட்டியின் மறைவுதான் இறப்புக்குக் காரணம் என்று சொல்ல நிர்ப்பந்தித்ததும் அம்பலமாகியுள்ளது.

எடுத்துக்காட்டாக, வாரங்கல் மாவட்டத்தின் பரக்கலா தாலுக்காவைச் சேர்ந்த எழுபது வயதான உப்பலய்யா மாரடைப்பால் இறந்து போனார். அவர் திடீரென்று மாரடைப்பால் இறந்ததாக அவரது மகன் மல்லையா கூறினாலும், ஒருமாதமாகவே மூச்சுவிட முடியாமல் உப்பலைய்யா அவதிப்பட்டு வந்ததாக மல்லையாவின் மனைவி லட்சுமம்மா கூறியுள்ளார். ஜகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாக்சி தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்ட உள்ளுர் காங்கிரஸ்காரர்கள் ராஜசேகர்ரெட்டி மறைவின் அதிர்ச்சிச் செய்திதான் உப்பலய்யாவின் மரணத்திற்குக் காரணம் என்று செய்தி போடச் செய்துள்ளார்கள்.

40 வயதான பி.ஸ்ரீஹரி, 80 வயதான சுக்கா சாயம்மா என்ற பெண்மணி, 45 வயதான ராஜமவுலி ஆகியோரின் மரணங்களும் இயற்கையான மரணங்களே என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களின் குடும்பங்களின் வாயை அடைக்க காங்கிரஸ்காரர்கள் பணம் தந்துள்ளார்கள். ஹனம்கொண்டாவைச் சேர்ந்த 25 வயதான தீகலா சிரஞ்சீவியின் கதை வித்தியாசமானது. அவருக்கென்று யாரும் கிடையாது. அதோடு அவர் ஒரு மனநோயாளி. செப்டம்பர் 5 அன்று அவர் திடீரென்று தனது உடலில் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டார். அவரது உடலை வாங்கவோ அல்லது எரிக்கவோ யாரும் இல்லாததால் உள்ளுர் மாணவர் காங்கிரஸ்காரர்கள், இவரும் ராஜசேகர்ரெட்டியின் மறைவின் துயரம் தாங்காததால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தியைப் பரப்பிவிட்டார்கள்.

இத்தகைய மோசடியான தகவல்களைப் பரப்புவதில் ஜகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர் என்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Sunday, September 13, 2009

திருவாளர் முஸ்லிம் அவர்களே...



சக முஸ்லிம் ஒருவருக்கு பயப்படுவதில் 10 சதவீதமாவது முஸ்லிம்கள் அல் லாவுக்கு பயந்தார்கள் என்றால், அவர்கள் சிறந்த முஸ்லிம்களாகவும் உணர்வுமிக்க மனிதர்களாகவும் மாறுவார்கள் என்று பாலிவுட் திரைக்கதை ஆசிரியரும், பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவெத் அக்தர் பல மேடைகளில் பேசியிருக்கிறார். மும்பை, டில்லி, லக்னோ, கான்பூர், அலகாபாத், ஐதராபாத் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் முஸ்லிம்களைச் சீண்டிவிடக்கூடிய இந்த வாக்கியங்களை அவர் வெளிப் படையாகப் பேசியிருக்கிறார். இந்த வசனங்களைக் கேட்டவர்களிடையே ஆமோதிக்கும் தலையாட்டமும், சங்கடம் நெளியும் புன்னகையும், சப்தமான வாவ் வாவ் குரல்களும் வெளிப்பட்டன.


இதே வசனங்களை ஜமியாத்-உல்-உலேமா-இ ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த மதிப்புமிக்க மவுலானா ஒருவரும், கடந்த ஆண்டு தனிப்பட்ட உரையாடலின் போது கூறினார். முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் ஊடகங்களும் எங்களுக்கு முன்நிற்கும் பெரும் தடைகள் என்றும் அவர் கூறினார். எது சொன்னாலும் நடந்தாலும் அல்லாவைக் கூறுகிறார்கள். எதிர் கருத்துக்களைக் கூற விரும்புவோர் அச்சப்படவேண்டும்.


முஸ்லிம்கள்தான் சக முஸ்லிம்களைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றால், தேசிய சட்டக்குழு யாரைக்கண்டு பயப்படுகிறது? வெளிப்படையாகக் கூறுவதைக் காட்டிலும் பொதுவான சங்கடங்களை ஏன் அது தேடிக்கொள்ள வேண்டும்? இருதார மணம் குறித்த முஸ்லிம்கள் சட்டம் குறித்த வழிவழிவந்த புரிதல்கள், அடிப்படையிலேயே தவறானதாகும். அது உண்மையான முஸ்லிம் சட்டங்களிடம் எழுத்திலும் உணர்விலும் முரண் பட்டு நிற்கிறது என்று அண்மையில் வெளியான தேசிய சட்டக்குழுவின் 277வது அறிக்கை குறிப்பிடுகிறது. நன்றாகவே சொல்லியுள்ளது. ஆனால் அந்த அறிக்கை அடுத்து என்ன சொல்கிறது? இருதார மணத்துக்காகச் செய்யப்படும் மோசடி மதமாற்றத்தைத் தடுக்க, இந்து குடும்பச் சட்டத்தில் ஒரு புதிய சட்டப் பிரிவை சேர்க்குமாறு அது முன்மொழிந்துள்ளது. ஆனால் “மத உணர்வுகளை” மனதிற்கொண்டு முஸ்லிம் தனிநபர் சட்டங்களில் அவசியம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி அறிக்கை வாய் திறக்கவில்லை.


இஸ்லாமிய சட்டம், இந்து சட்டம், மதம் மாற்றும் சட்டம், சிறுபான்மையினர் சட்டங்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் தாஹிர் முகமது, இந்திய சட்டக்குழுவில் ஒரு உறுப்பினர் ஆவார். இஸ்லாமில் உள்ள இருதாரமுறை பற்றிய சட்டக்குழுவின் கணிப்புகளுக்கு இவர் ஒரு உந்து சக்தியாக இல்லாதபோதும் அதன் கணிப்பில் இவருக்கும் பங்கு உண்டு என்பதில் ஐயம் இருக்க முடியாது. அவரைப் பற்றி நாம் சிறிது சிந்திப்போம். அவர் தம்முடைய மனசாட்சிக்கும் மதத்துக்குமிடையே அல்லாடுகிறார். முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் இஸ்லாத்தினுடையதல்ல என்று அவருடைய இஸ்லாம் பற்றிய அறிவு கூறுகிறது. கடந்த சில பத்தாண்டுகளில், பல இஸ்லாமிய நாடுகளில் முல்லாக்களின் ஒப்புதலோடு பரந்துபட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன வென்று இஸ்லாமிய உலகம் பற்றிய அவருடைய அறிவு கூறுகிறது.


உதாரணமாக, பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் பெண்ணின் திருமண வயது குறைந்தது 16 ஆகும்; லெபனான், டுனீசியா மற்றும் சிரியாவில் இது 17 ஆகும்; அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் ஜோர்டானில் 18 ஆகும். ஆனால் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம், முஸ்லிம் சிறுமியர்களுக்கு பாலியல் விவாகம் குறித்த சட்டப்பிரிவுகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டுமென்று கேட்டது.


டுனீசியா, துருக்கி மற்றும் லெபனான் (சிலபிரிவினருக்கு) போன்ற நாடுகளில் பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் தீவிரமான கட்டுப்பாடுகள் உள்ளன. பாகிஸ்தானில் சில நிபந் தனைகளுக்கு உட்பட்டு பலதார மணம் அனுமதிக்கப்படுகிறது. தற்போதைய மனைவியிடம் முன்அனுமதி பெற்றது குறித்து மத்தியக்குழுவை நம்பவைப்பது, உள்ளிட்ட சில நடைமுறைகள் பின்பற்றப் பட்ட பின்தான் அங்கு இருதாரமணம் அனுமதிக்கப்படுகிறது. மலேசியாவில் ஷரியாத் நீதிமன்றத்தின் சம்மதத்துடன் தான் இரண்டாவது திருமணம் செய்ய முடியும்.


இந்தோனேசியாவில் பொதுத்துறை யில் பணிபுரியும் பெண்கள் இரண்டாம் தாரமாக ஆக முடியாது. அத்துடன் வங்க தேசம், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்சில் பொதுத்துறையில் ஊழியம் செய்யும் ஆண், இரண்டாம் திருமணம் செய்ய விரும்பினால், அதற்குரிய நிபந்தனைகளை நிறைவேற்றுவதுடன் மேலதிகாரிகளின் அனுமதியையும் பெறவேண்டும். இரண்டாம் திருமணத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். 1990ல் இரண்டு முஸ்லிம் நீதிபதிகள் அடங்கிய டாக்கா உயர்நீதிமன்றப் பெஞ்சு அளித்த தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. குரானில் கூறப்படும் நியதிகள் அனைத்தும் ஒருதார மணத்தைப் பற்றியதே என்று அத்தீர்ப்பு கூறியது. மாறுபட்ட அரசியல் சூழலில் வங்கதேச உச்சநீதிமன்றம் அத் தீர்ப்பை தள்ளுபடி செய்தது.


ஆனால், ஏராளமான சலுகைகளைப் பெற்றுள்ள இந்திய முஸ்லிம் ஆடவருக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இவை அனைத்துக்கும் மேலாக ஒரு முஸ்லிம் ஆடவர் ஒரே சமயத்தில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இரண்டாண்டுகளுக்கு முன் ஐதராபாத்தில் ஒரு மதக்கட்டளை (பட்வா) பிறப்பிக்கப்பட்டது.


ஒரு முஸ்லிம் ஆடவர் தன்னிச்சைப் படி திருமணத்தை ரத்து செய்வது ‘தலாக்’ எனப்படும். அல்ஜீரியா, இந்தோனேசியா மற்றும் டுனீசியா ஆகிய நாடுகளில் இந்த உரிமைக்கு அங்கீகாரம் கிடையாது. நீதிமன்றங்கள் மூலமே விவாகரத்து பெறமுடியும். மொராக்கோவிலும் விவாக ரத்து நீதிமன்றங்களின் கறாரான கட்டுப் பாட்டில் உள்ளது. ஜோர்டான், லெபனான், மலேசியா மற்றும் சிரியாவில் விவாகரத்து பெற அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யவேண்டும்.


பெரும்பாலான நாடுகளில் விவாகரத்துக்கு முன்பாக சமரச முயற்சிகள் செய்வது கட்டாயமாகும். ஈரானில் தலாக் கூறி யதற்கு அவசியமாக இரண்டு சாட்சிகள் தேவை. இந்திய முஸ்லிம்கள் மட்டுமே உடனடி தலாக் (மும்முறை) உரிமையை கட்டுப்பாடின்றி அனுபவித்து வருகின்றனர். எந்தவொரு நிலையிலும், குடித்திருந்தாலும், இல்லாவிட்டாலும், ஆத்திரப்பட்டோ அல்லது ஒருவித மனக்கிலே சத்திலோ அவர் எப்போது, எப்படி, தலாக்கை முகத்துக்கு எதிரிலோ, கடிதத்திலோ, தந்தியிலோ, தொலைபேசியிலோ, ஒரு மின் அஞ்சலிலோ அல்லது குறுஞ்செய்தி சேவையிலோ (எஸ்எம்எஸ்) முஸ்லிம் கணவர் அறிவிக்க முடியும்.


டுனீசியா, மொராக்கோ மற்றும் துருக்கியின் குழந்தைகளைப் பாதுகாத்து பராமரிக்கும் உரிமை, விவாகரத்து பெறும் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தகப்பனுக்கு மட்டுமே ‘இயல்பான உரிமை’ அளிக்கப் பட்டுள்ளது. பாலியல் நீதியைப் பொறுத்த வரை பாரம்பரிய மன்னராட்சி கொண்ட மொராக்கோ முஸ்லிம் பெண்களுக்கு சிறந்த இடமாகத் திகழ்கிறது.


மன்னர் ஆறாம் முகமது, அக்டோபர் 2003ல் அறிவித்த குடும்ப நியதிகளை பிப்ரவரி 2004ல் மொராக்கோ நாடாளுமன் றம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. அதன்படி திருமண ஒப்பந்தத்தில் ஆணும், பெண்ணும் சம கூட்டாளிகளாவர். கணவன் இனியும் குடும்பத்தலைவன் என்று கூறமுடியாது. கணவன் -மனைவி இருவருமே குடும்பத்துக்கு கூட்டு பொறுப்பாளிகளாவர்.


சுருக்கமாகச் சொல்வதென்றால், ஏரா ளமான முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு கிடைக்கும் உரிமைகளைவிடக் குறைவாகவே இந்திய முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது விந்தையான விஷயம். கற்றறிந்தவரும் சிறந்த முஸ்லிமுமான டாக்டர் முகமது இந்தியாவில் இஸ்லாத்தின் பெயரால் ஆணாதிக்கம் மேலோங்கி நிற்பதை வேதனையோடு உணராமல் இருக்க முடியாது. அவர்கள் போற்றித்துதிக்கின்ற நம்பிக்கைகளைப் பற்றிய அறியாமை கொண்ட முஸ்லிம்கள் அல்லது வெளி வேஷமிட்டு நம்பிக்கையின் மேல் சபதம் செய்தவர்களுக்கு மத்தியில் வாழும் அவர், தனது வார்த்தைகளை அளந்து பேசுவது சரி என்று எண்ணுகிறார்.


இந்திய நாட்டின் திருவாளர் முஸ்லிம், இஸ்லாத்தில் மதகுருக்களுக்கு இடமில் லை என்று பெருமையுடன் கூறுவார். ஆனால், இஸ்லாத்தைப் பற்றிய சகல ஞானத்தையும் அவர் கேள்விக்குள்ளாக்கும் மதகுருக்களுக்கு அவுட்சோர்சிங் செய்துவிடுகிறார். அதன் விளைவாக இஸ்லாத்தைப்பற்றி, மோட்சத்துக்குப் போக தகுதியான பாஸ்போர்ட் இஸ்லாம் என்பதைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது.


திருவாளர் முஸ்லிம் அவர்களே, பாலின அநீதியுள்ள இஸ்லாம் வெட்கப்பட வேண்டியதொன்றே தவிர பெருமைக்குரியது அல்ல.


ஜாவேத் ஆனந்த்

கட்டுரையாளர், மதவாத எதிர்ப்பு இதழின் கூட்டாசிரியரும், மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான முஸ்லிம்கள் அமைப்பின் பொதுச்செயலாளரும் ஆவார்.

தமிழாக்கம்: தாஸ்

Thursday, September 10, 2009

கமலுக்கு ஒளிவட்டம் தேவையா...?


களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய கமல்ஹாசனின் திரைப்பட வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளைத் தொட்டுவிட்டது. சாதனைகள், வெற்றிகள், தோல்விகள், படிப்பினைகள் என்று பல மட்டங்களைத் தொட்டு இன்றும் அவருக்கென்று திரைப்பட உலகில் ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் கமல்ஹாசன்.


வித்தியாசமான படங்களைத் தர வேண்டும் என்ற தாகத்தை உடையவர்களில் ஒருவர் என்று சொல்வதை விட, அந்தத் தாகத்தைக் கொண்டவர்களில் பலருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராகவும் இருப்பவர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் பரம ரசிகனுக்கு சகலகலா வல்லவன் படம் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் வர்த்தக ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இத்தகைய படங்கள் அவருக்கு அவ்வப்போது தேவைப்பட்டன.


பெரும் மகிழ்ச்சிகரமான செய்தி அவரிடம் சொல்லப்பட்டபோது எந்தவித நியாயமும் இல்லாத ஒரு கேள்வியும் அவரிடம் எழுப்பப்பட்டது. மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக தேசிய அளவிலான சிறந்த நடிகர் விருது அவருக்குக் கிடைத்தது என்பதுதான் அந்த மகிழ்ச்சிகரமான செய்தி. ஆனால் அந்தப்படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்குக் கிடைக்காமல் இவருக்குக் கிடைத்தது எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வியும் அப்போது எழுப்பப்பட்டது.
பரபரப்புக்காக செய்திகளைப் போட்ட பத்திரிகைகள், அவரிடம் பேட்டி என்ற பெயரில் கேள்வியையும் எழுப்பின. சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். எனக்குக் கிடைத்துள்ள சிறந்த நடிகருக்கான விருது, நடிகைக்கான விருதல்ல என்று.
கமல்ஹாசனின் திறமை ஒருபோதும் குறைத்து மதிப்பிடப்பட்டதில்லை. ஆனால் அவரைச்சுற்றி ஒரு ஒளிவட்டத்தை எழுப்பவும் சில முயற்சிகள் நடந்தன. குரு திரைப்படத்தில் நாயகி ஸ்ரீதேவியைத் தூக்கிக்கொண்டே கண்ணாடியை உடைப்பது போன்ற காட்சி. அதற்கு டுப் போட விரும்பாத கமல் தானே உடைப்பதாகக் கூறி அதில் நடித்திருக்கிறார். உடைத்தபோது அடிபட்டு அவரது கையில் ரத்தம் கொட்டியது. இதுதான் நடந்தது.
ஆனால் அவர் உடைத்தபோது அந்த உடைசல் இதயம் போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தது என்று வதந்தி பரவியது. அவர் காதல் இளவரசன். அதனால்தான் உடைந்த கண்ணாடியில் இதய வடிவம் இருந்தது என்றெல்லாம் விவாதத்தைக் கிளப்பினார்கள்.

Wednesday, September 9, 2009

கொலைகார (அமெரிக்க) மருத்துவர்கள்!


அமெரிக்க மத்தியப் புலனாய்வுக்குழு(சிஐஏ)வில் இணைந்து பணியாற்றும் மருத்துவர்கள் சித்திரவதை செய்யும் கொடுர செயல்களில் பெரும் பங்கு வகித்துள்ளார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்த ஆய்வை மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் என்ற அமைப்பு மேற்கொண்டது. 1977 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசை இந்த அமைப்பும் பகிர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிஐஏவுடன் இணைந்து பணியாற்றிய மருத்துவர்கள் கடுமையான மனித உரிமை மீறல்களை செய்துள்ளார்கள் என்று இந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 31 அன்று இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் உத்தரவுப்படி வெளியாகியுள்ள சிஐஏயின் ரகசிய ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. "மேம்படுத்தப்பட்ட விசாரணை உத்திகள்" என்ற பெயரில் மருத்துவர்களையும் இணைத்துக் கொண்டு அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கொடுரமான சித்தரவதைகளை மேற்கொண்டுள்ளனர். சித்தரவதை உத்திகளை வடிவமைத்துக் கொடுத்து, அதை நடைமுறைப்படுத்திக் காட்டுவதோடு, எந்தளவுக்கு அது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் மருத்துவர்களைக் கொண்டு கண்காணித்துள்ளார்கள். போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றால் உத்திகளைக் கடுமையாக்கும் வேலையும் மருத்துவர்களிடம் விடப்பட்டது.

நேர்மையற்ற முறையில் சட்டவிரோதமான செயல்களில் மருத்துவர்கள் எவ்வாறு இறங்கினார்கள் என்பதை சிஐஏயின் ரகசிய ஆவணங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. பொதுவாக, விசாரணையின்போது கைதிகளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்காகவே மருத்துவர்களை அழைப்பது வழக்கம். ஆனால் எந்த அளவுக்கு சித்தரவதையை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதைத் தீர்மானிக்கவே அவர்கள் சித்தரவதையின்போதே நாற்காலி போட்டு அருகில் அமர்ந்து கொள்கிறார்கள். தலையிலிருந்து கழுத்துவரை உறை போட்டு மறைப்பது, உணவு தராமல் ஏமாற்றுவது, உடலோடு சேர்த்து துணியைக் கட்டிவிட்டு இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ளச் செய்து அதை சுத்தம் செய்ய வாய்ப்பு தராமல் இருப்பது போன்ற கொடுரங்களை நிகழ்த்தச் செய்கிறார்கள். இந்த உத்தியெல்லாம் பழையதுதான். ஆனால் ஒரு கூண்டில் அடைத்து வைத்து செய்யச் சொல்லும் புதிய உத்தியை மருத்துவர்கள்தான் சிஐஏக்காரர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

அதோடு, ஒரே சமயத்தில் இரு கொடுமைகளைச் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்று உயிர்களைக் காப்பாற்றுவதற்காக படித்துப் பட்டம் பெற்ற இந்த மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள். அதோடு, ஒவ்வொரு கொடுர செயலுக்கும் எவ்வகையான விளைவு இருக்கும் என்றும் அந்த மருத்துவர்கள் ஆய்வு(!) செய்துள்ளார்கள். குறிப்பாக, கூண்டிற்குள் அடைத்து தலையிலிருந்து கழுத்துவரை துணியால் மூடிவிடுவதால் வாழ்க்கை குறித்த அச்சத்தை ஏற்படுத்த முடியும். உடல் ரீதியாக, மூச்சுவிடுவதை சிரமமாக்கும் என்பதைத்தவிர வேறு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும் மனரீதியாகப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கவனம் சிதறுதல், ஞாபக மறதி, வாய்விட்டு புலம்புதல், குழறும் பேச்சு, எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும் தன்மை, அசாதாரண நடவடிக்கை மற்றும் தற்கொலையை நோக்கி செல்லுதல் போன்ற விளைவுகள் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுபவரிடம் ஏற்படுகின்றன என்கிறது அந்தக் கொடுர மருத்துவர்களின் குறிப்புகள். மனரீதியாக மட்டுமில்லாமல் உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்த திரவ உணவை மட்டுமே தரும் பழக்கத்தை உண்டாக்கியுள்ளார்கள். உடல் ரீதியாக சக்தி இழக்கச்செய்து அதன் மூலம் கைதிகளை தங்கள் வழிக்கு வரவைக்கும் உத்தியாக இதைக் கையாண்டுள்ளார்கள்.

எவ்வளவு திடமானவராக இருந்தாலும், அவரைத் திணறச் செய்வதற்காக துணியைக் கட்டிவிட்டு அதிலேயே இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ளச் செய்யும் முறையைக் கடைப்பிடித்துள்ளார்கள். 36 மணிநேரம் வரை இந்த சித்தரவதை நீடித்துள்ளது. சிறுநீரகக்கோளாறு, வயிற்றுப்புண், தோல்வியாதி போன்றவற்றை உருவாக்கி அதன் மூலம் கைதிகளை சோர்வடையச் செய்யும் உத்தியாக இதைக் கடைப்பிடித்துள்ளார்கள். சில சமயங்களில் துணியைக் கட்டிவிடாமல், நின்றுகொண்டே இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ளச் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் மருத்துவர்களின் உதவியோடு நடந்திருக்கிறது. அதுசரி.. அமெரிக்க அரசு என்ன செய்யப்போகிறது? அதான் வெளியிட்டாச்சுல்ல... என்று கூறி விட்டு நகர்ந்துவிட்டது. அமெரிக்க மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான் இன்னும் தெளிவாகவில்லை.

Tuesday, September 8, 2009

மோடியின் அலமாரியிலிருந்து அடுத்த எலும்புக்கூடு!


சோராபுதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டது போலி மோதலில்தான் என்று ஆதாரங்கள் வெளிவந்து அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு குஜராத் அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 2004 ஆம் ஆண்டில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டதும் போலி மோதல்தான் என்பது அம்பலமாகியுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் அரசு எந்திரம் பெரும் அளவிற்கு தவறான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றோடு காந்தி பிறந்த மண்ணில் கள்ளச்சாராயத்தை ஆறாகப் பெருகி ஓடச்செய்ததும் மோடியின் மேற்பார்வையில்தான் என்ற செய்தி நிர்வாகம் செயலிழந்து போயிருப்பதையே காட்டுகிறது.


ஜூன் 2004 ஆம் ஆண்டில் நடந்த மோதலில் குஜராத் முதல்வர் மோடியைக் கொலை செய்ய சதி செய்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வெளிவந்தது. மும்பையைச் சேர்ந்த இஷ்ரத், கேரளாவைச் சேர்ந்த கோபிநாத் பிள்ளையின் மகன் ஜாவேத் ஷேக், பாகிஸ்தானைச் சேர்ந்த அம்ஜத் அலி ரானா மற்றும் ஜிஷான் ஆகிய நான்குபேரும் மோடியைக் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தார்கள் என்றும், அகமதாபாத் நகருக்கு வெளியில் நடந்த மோதலில் இந்த நான்கு பேரும் கொல்லப்பட்டார்கள் என்றும் அப்போது காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இஷ்ரத்தின் உடலை வாங்குவதற்காக வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள், முதன்முறையாக லஷ்கர்-இ-தொய்பா என்ற பெயரைக் கேள்விப்படுகிறோம் என்று கதறி அழுதனர். மோடியின் தலைமையில் மாநில அரசு இருப்பதால் நீதி கிடைக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் மும்பை திரும்பினர். ஆனால் குஜராத் படுகொலைகள் மற்றும் அதைத்தொடர்ந்து நடக்கும் போலி மோதல்கள் குறித்து உச்சநீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம் போன்றவை பல்வேறு வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளன. இஷ்ரத் கொலை சம்பந்தமாகவும் குஜராத் உயர்நீதிமன்றம் அத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ள வேளையில்தான் அகமதாபாத் மாநகர் மாஜிஸ்ரேட் எஸ்.பி.தமங்கின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது.

243 பக்கங்களைக் கொண்ட இந்த விசாரணை அறிக்கையில், காவல்துறை அதிகாரி வன்ஜாரா உள்ளிட்ட பலர்தான் நான்கு பேரையும் கொலை செய்துள்ளனர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் ஏற்கெனவே சோராபுதீன் வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளனர். முதல்வரைத் திருப்திப்படுத்தி பதவி உயர்வைப் பெறுவதே இந்த காவல்துறை அதிகாரிகளில் நோக்கமாக இருந்திருக்கிறது என்று குற்றம் சாட்டும் மாஜிஸ்ட்ரேட் தமங், இரு பக்க அளவிலான காவல்துறையினரின் பெயர்ப்பட்டியலையும் பதிவு செய்துள்ளார். ஜூன் 12, 2004 அன்று இந்த நான்கு பேரையும் குஜராத் காவல்துறை கடத்திக் கொண்டு வந்துள்ளது. காவல்துறைப் பாதுகாப்பில் இருக்கும்போதே ஜூன் 14 இரவில் அந்த நான்கு பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் மறுநாள் காலையில் மோதல் நடந்ததாகக் காவல்துறையினர் ஜோடித்துள்ளனர். இதற்காக ஏற்கெனவே உயிரிழந்த இஷ்ரத்தின் உடலைத் தோட்டாக்களால் துளைத்துள்ளனர். அகமதாபாத்திலிருந்து மும்பை சென்ற இவர்கள் காரில் குண்டுகளும், துப்பாக்கிகளும் இருந்ததாக காவல்துறையினர் கூறியிருந்தனர். அது காவல்துறையாலேயே வைக்கப்பட்டது என்று தமங் அறிக்கை அம்பலப்படுத்துகிறது. அதோடு, இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவேத் ஷேக் ஆகிய இருவரையும் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புபடுத்துவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், மோடியைக் கொல்வதற்காகவே அவர்கள் குஜராத்திற்கு வந்தார்கள் என்பதையும் நிரூபிக்கவில்லை என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

குஜராத் படுகொலை தொடர்பான ஏராளமான வழக்குகள் இழுத்து மூடப்பட்டன. அவற்றில் சில வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் தலையீடு காரணமாக மீண்டும் விசாரிக்கப்படுகின்றன. பாரபட்சமில்லாத ஒவ்வொரு விசாரணையும் மோடி தலைமையிலான பாஜக அரசின் வெறியாட்டத்தையே அம்பலப்படுத்தி வருகிறது. இவர்களின் இந்த மதவெறியை தங்கள் வளர்ச்சிக்காக காவல்துறையினர் பயன்படுத்த முயற்சித்துள்ளனர். அப்பாவி மக்கள், குறிப்பாக அப்பாவி சிறுபான்மை மக்கள் இந்த இரு தரப்பின் வெறியாட்டங்களுக்கு பலியாகியுள்ளனர். மோடியின் அலமாரியிலிருந்து மேலும் எலும்புக்கூடுகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது