Monday, December 28, 2009

அழவைக்கும் வெங்காய விலை..!


அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வால் மக்கள் கடுமையான துயரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருட்களின் விலை உச்சத்திற்குச் சென்றுள்ளது. பல தனியார் நிறுவனங்களும், ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் சிலரும் இதற்கெல்லாம் முன்பேர வர்த்தகம் காரணமல்ல என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த விலையுயர்வு காரணமாக விளைபொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்யப் போகிறோம் என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் அத்தியாவசியப் பொருட்களை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எகிறிய அரிசி, கோதுமை விலை

கடந்த 2007ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த இடதுசாரிகளின் வற்புறுத்தலால், அரிசி, கோதுமை, துவரம்பருப்பு மற்றும் உளுந்து மீது முன்பேர வர்த்தகம் மேற் கொள்ள மத்திய அரசு தடைவிதித்தது. இதன் பிறகு, சர்க்கரை உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்ற நவம்பர் மாதத்தில், அனைத்து பொருட்களுக்கான பணவீக்க விகிதம் (4.78 சதவீதம்) அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதால் அனைத்து விளைபொருட்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கை ரப்பர் விலை, வழக்கத்திற்கு மாறாக மிகவும் உயர்ந்துள்ளது. இதற்கு ஊக அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முன்பேர வர்த்தகமே காரணம் என்று மோட்டர் வாகன டயர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் கூறுகிறார்.

இரண்டு மடங்கான உருளைக்கிழங்கு

பொதுமக்களில் கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தக்கூடிய உருளைக்கிழங்கின் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. கிடைக்கும் வருமானத்தில் ஐம்பது விழுக்காட்டை உணவுப்பொருட்களுக்காகவே மக்கள் செலவிடுகிறார்கள். ஒரே ஆண்டில் உருளைக் கிழங்கு விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதாவது 136 விழுக்காடு அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் (40 விழுக்காடு), வெங்காயம் (15.4 விழுக்காடு), கோதுமை (14 விழுக்காடு), பால் (13.6 விழுக்காடு), அரிசி (12.7 விழுக்காடு), பழங்கள் (11 விழுக்காடு) விலையும் உயர்ந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு 20 சதவீதத்தை எட்டி உள்ளது. அன்றாடம் தேவைப்படும் இந்தப் பொருட்களின் விலையுயர்வு மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

பொய்த்த பருவமழை

விலை கடுமையாக அதிகரித்துள்ளதற்கு, போதிய அளவு மழையின்றி உற்பத்தி குறைந்ததும் காரணமாகும். ஒரு ஆண்டு சர்க்கரையின் தேவை 2.35 கோடி டன்னாக இந்தியாவில் இருக்கிறது. அதே சமயம், நடப்பு சர்க்கரை பருவத்தில் (சர்க்கரை பருவம் என்பது முந்தைய ஆண்டின் அக்டோபரிலிருந்து நடப்பாண்டு செப்டம்பர் வரையிலானது) 1.60 கோடி டன் மட்டுமே சர்க்கரை உற்பத்தியாகும் எனக் கூறப்படுகிறது. அதாவது 75 லட்சம் டன் சர்க்கரை பற்றாக்குறையாக இருக்கப்போகிறது. கடந்த நிதியாண்டில், பத்து கோடி டன்னாக இருந்த அரிசி உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் 8.45 கோடி டன்னாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவை ஆண்டிற்கு 1.20 கோடி டன் சமையல் எண்ணெய் ஆகும். ஆனால் 65 லட்சம் டன்னாகத்தான் உற்பத்தி இருக்கிறது.

கடந்த 2003-04 ஆம் நிதியாண்டில் ஒரு ரூபாய்க்கு 7.70 கிராம் உணவு தானியம் கிடைத்தது. இது தற்போது பாதியாக அதாவது 3.7 கிராமாக சரிவடைந்துள்ளது. உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு உற்பத்தி குறைவுதான் காரணம் என்று கூறப்பட்டாலும், முன்பேர வர்த்தகமும் ஒரு காரணமாக உள்ளது என்று பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால்தான் விலையுயர்வுக்குக் காரணமாக இருக்கும் முன்பேர வர்த்தகத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் வலியுறுத்தின. விலைவாசி உயர்வுக்கும், முன்பேர வர்த்தகத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயுமாறு பொருளாதார நிபுணரும், மத்தியத் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அதன் அறிக்கையில் "விலைவாசி உயர்வுக்கு முன்பேர வர்த்தகம் வழிவகுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment