Wednesday, June 24, 2009

வற்றி வரும் கச்சா எண்ணெய்...!


இராக்கின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி ஆக்கிரமிப்பு செய்தபோது அது பெட்ரோல் வளத்தைக் கைப்பற்றவே என்பது அனைவரும் அறிந்த ரகசியமாக இருந்தது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இராக்கில் உள்ள பொம்மை அரசு பெட்ரோல் கிணறுகளில் அமெரிக்க வாளிகளை இறக்கும் வேலையில் இறங்கியுள்ளது. தென் அமெரிக்க மக்களிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு மேற்கு ஆசியாவைவிட்டு நகர்வதில்லை என்று அமெரிக்கப்படைகள் உட்கார்ந்து கொண்டுவிட்டன. தான் ஆட்சிக்கு வந்தால் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று உறுதிமொழி அளித்த ஒபாமா, பொருளாதார நெருக்கடிச் சுழலில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிற பெட்ரோல் வளம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகிறது. பெட்ரோல் தேவை கையைக் கடிக்கும் காலம் வருவதற்கு இன்னும் ஒரு தலைமுறை ஆகிவிடும் என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும் அச்சத்தின் நிழல் மனிதகுலத்தைப்பின்தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. மேற்கு ஆசியாவின் அமைதியைக் குலைத்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு இயற்கை வளம் சூறையாடப்படும் வரையிலும் தொடரும் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்து. 70க்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவம் வெளியேறாமல் நிரந்தரக் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டது வரலாறு.


தற்போது சவூதி அரேபியாதான் அதிகமான அளவில் எண்ணெய் எடுத்துக் கொண்டிருக்கிறது. பீப்பாய்க்(பேரல்) கணக்கில் கச்சா எண்ணெயை அளவிடுகிறார்கள். ஒரு பீப்பாய் என்பது 159 லிட்டராகும். பெட்ரோலியத்துறையில் பகாசுர நிறுவனம் என்று கருதப்படும் பிபி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கின்படி சவூதி அரேபியாவிற்கு அடுத்து, ஈரான், இராக், குவைத், வெனிசுலா, யுஏஇ, ரஷ்யா என்று பட்டியல் நீளுகிறது. சுமார் 27000 கோடி பேரல் எண்ணெய் இருப்பு சவூதி அரேபியாவிடம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் சவூதி அரேபியாவைவிட ஈரான், இராக் ஆகிய நாடுகளில் அதிக ஆண்டுகள் எண்ணெய் இருப்பு நீடிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் எண்ணெயின் அளவைப் பொறுத்தே இது கணக்கிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அளவு, ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்பட்டால் சவூதி அரேபியாவிடம் உள்ள எண்ணெய் வளம் இன்னும் 66 ஆண்டுகளுக்கு தாங்கும். ஈரானின் வளம் 87 ஆண்டுகளும், இராக் மற்றும் வெனிசுலாவில் நூறு ஆண்டுகளுக்கு மேலும், குவைத்தில் 99 ஆண்டுகளும் எண்ணெய் இருப்பு தாக்குப்பிடிக்கும். எண்ணெய் வெறி பிடித்து அலையும் அமெரிக்காவின் கையில் உள்ள இருப்பு இன்னும் 12 ஆண்டுகள் நான்கு மாதங்களுக்குத்தான் தாங்கும். இதுதான் ஈரான், வெனிசுலா என்று தனது கழுகுக்கண்களை படரவிடுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.


இந்த எண்ணெய் வள இருப்புகளைக் கணக்கிடுவதிலும் சிக்கல் உள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் வளம் பலரும் கணக்கிட்டுக் கொண்டுள்ள அளவிற்கெல்லாம் இல்லை. அதேபோல் கனடாவில் எக்கச்சக்கமான அளவு கச்சா எண்ணெய் புதையுண்டு கிடக்கிறது. சொல்லப்போனால் சவூதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக அந்த நாட்டில்தான் எண்ணெய் வளம் கொட்டிக் கிடக்கிறது என்று சொல்பவர்களும் உண்டு. தகவல் களஞ்சியம் என்று கருதப்படும் விக்கிபீடியாவில் சுமார் 17 ஆயிரத்து 900 கோடி பீப்பாய்கள் இருப்பு கனடாவில் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பிபி நிறுவனம் வெளியிட்டுள்ள விபரத்தில் வெறும் 2500 கோடி பீப்பாய் எண்ணெய்தான் கனடாவில் உள்ளது என்று கூறப்படுகிறது.


கண்டறிந்ததைவிட இன்னும் ஏராளமான எண்ணெய் வளம் புதையுண்டு கிடப்பதாக கருதப்படும் நாடுகளில் ரஷ்யா மற்றும் சில தென் அமெரிக்க நாடுகள் அடங்கும். அபரிமிதமான எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடுகளில் வெனிசுலா போன்ற ஒரு சில நாடுகள்தான் அந்த வளத்தில் கிடைக்கும் வருமானம் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என்று செயல்படுகின்றன. சாவேஸ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த எண்ணெய் வளத்திற்கும் வெனிசுலாவில் உள்ள சுமார் 90 சதவீத மக்களுக்கு தொடர்பே இல்லாமல் இருந்தது. அந்த நிலைமை அங்கு மாறிவிட்டது. மற்ற நாடுகளிலும் மாற வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment