Wednesday, December 28, 2011

உச்சி முகர அமெரிக்கர்கள் விரும்பினால்...!!

போராளி

கடந்த ஆண்டில்(2010-11) மட்டும் பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்த வருமானம் 4.6 லட்சம் கோடி ரூபாயாகும். மானியங்கள் பற்றி இந்தப் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் வாய்கிழியப் பேசுகின்றன. சாமான்ய மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் ஓட்டையைப் போட்டு விடுகிறது என்று பக்கம், பக்கமாக எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் மிக, மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள பெரும் பணக்காரர்களுக்குத் தரப்படும் மானியம், ஒட்டுமொத்த மக்கள் தொகைக்குக் கிடைக்கும் மானியத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

சுங்க மற்றும் கலால் வரி விதிவிலக்குகள் மூலம் 3 லட்சத்து 73 கோடி ரூபாயும், லாபத்தின் மீதான வரியில் விலக்கு அளித்ததால் 88 ஆயிரம் கோடி ரூபாயும் பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வருமானமாகப் போய்ச் சேர்ந்தது. இதைத்தாண்டி, 2009-10 ஆம் ஆண்டில் தரப்பட்ட சலுகைகளும் தொடர்கின்றன. ஒட்டுமொத்த தேச மக்களுக்கு உணவு, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றிற்காக மத்திய அரசு தரும் மானியம், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில்(2011-12) பத்தாயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.

பல பிரச்சனைகளை எடுத்து முழங்கிக் கொண்டிருக்கும் போராளிகள், இதுபற்றி வாய் திறப்பதில்லை. இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே இதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. உண்மையான போராளிகளான தொழிலாளர்கள் இந்தக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். மீண்டும் பிப்ரவரி 28 அன்று அனைத்துப்பகுதி மக்களோடு இணைந்து இத்தகைய கொள்ளைகளுக்கு எதிராக அவர்கள் களமிறங்குகிறார்கள்.

ஆண்டு சலுகையின் மதிப்பு(ரூபாயில்)
2008-09 4.20 லட்சம் கோடி
2009-10 4.37 லட்சம் கோடி
2010-11 4.60 லட்சம் கோடி

--

மௌன குரு

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருப்பதாகத் தொடர்ந்து பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள். 2011-12 நிதியாண்டின் முதல் காலாண்டில் பட்ஜெட் பற்றாக்குறை 74 ஆயிரத்து 730 கோடி ரூபாயாக இருந்தது. நிதியாண்டு இறுதியில் இது 2 லட்சத்து 86 லட்சமாக அதிகரிக்கப் போகிறது. மத்திய ரிசர்வ் வங்கிதான் இதைத் தெரிவித்துள்ளது. தங்களின் பொருளாதாரக் கொள்கை அற்புதங்களை நடத்தப் போகிறது என்று முரசடித்த மன்மோகன்சிங் மவுனகுருவாகவே காட்சியளிக்கிறார். வெளிநாடுகளுக்குச் சென்றால்தான் அவர் பேசுகிறார். இல்லையேல், நாட்டுக்குள் நுழையும் முன்பாக அவசர, அவசரமாக விமானத்தில் வைத்தே பேட்டி தருகிறார்.

-------------

உச்சிதனை முகர்ந்தால்...

அமெரிக்க ஏழைகளுக்கு மானிய விலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் வழங்கும் பணியை வெனிசுலா துவங்கியுள்ளது. இந்தப் பணி ஏழாவது ஆண்டாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. குளிர்காலத்தில் கடும் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் எரிபொருளின் உதவியால் சூட்டை உருவாக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் எரிபொருள் விலை எகிறிப் போய் இருப்பதால் ஏழைகளால் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிப்பது சிரமமானதாக இருந்து வந்தது.

இந்நிலையில்தான் இவ்வாறு சிரமப்படுபவர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு உதவி செய்ய வெனிசுலா முன்வந்தது. வெனிசுலாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ.வின் துணை நிறுவனமான சிட்கோ அமெரிக்காவில் இயங்கி வருகிறது. ஒரு காலத்தில் அமெரிக்காவில் கிடைக்கும் லாபத்தில் ஒரு ரூபாய் கூட வெனிசுலாவிற்கு அனுப்பாமல் இருந்த சிட்கோ நிறுவனம், சாவே° ஜனாதிபதியான பிறகு இந்நிறுவனம் சீரமைக்கப்பட்டு, அதன் வருமானம் வெனிசுலா மக்களுக்கு வந்து சேர வழிவகுக்கப்பட்டது.

இந்த சிட்கோ நிறுவனம் மூலமாகத்தான் மானிய விலையில் எரிபொருளை மக்களுக்குத் தருகிறார்கள். வரும் ஆண்டில் 4 லட்சம் அமெரிக்க ஏழைகள் இந்த எரிபொருளைப் பெற்றுக் கொள்ளவிருக்கிறார்கள். அமெரிக்காவை ரோஜாப் பூந்தோட்டம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஏராளமானவர்கள் வறுமையால் வாடுகிறார்கள் என்கிறார் எண்ணெய் வளத்துறை வல்லுநர் எலியோ ஓஹெப்.
2005 ஆம் ஆண்டில் துவங்கிய இந்த மானிய விலையில் எண்ணெய்த் திட்டத்திற்கு இதுவரையில் 2 ஆயிரம் கோடி ரூபாயை வெனிசுலா செலவிட்டுள்ளது.

ஒருவேளை தங்களுக்கிடைத்த உதவிக்காக யாரையாவது உச்சி முகர அமெரிக்கர்கள் விரும்பினால், அது வெனிசுலாவின் உச்சியாகவே இருக்கும்.

---

1 comment:

  1. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete