Saturday, January 8, 2011

மாற்றுத் திறனாளிகள் பற்றி பிருந்தா காரத்..!!!


நாடு முழுவதுமுள்ள மாற்றுத்திறனாளிகள் சந்தித்து வரும் பாரபட்சமான அம்சங்கள் குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரப்பகிர்வு அமைச்சரின் கவனத்தை ஈர்க்க நான் விரும்புகிறேன். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிர்வாக மற்றும் சட்டபூர்வமான வேலைகளை அவசரகதியில் செய்ய வேண்டுமென்று கேட்பதே எனது நோக்கம்.

பல்வேறு வகையான ஊனங்களைக் கொண்டவர்களின் பிரதிநிதிக்குழுக்களோடு அமைச்சரைச் சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். எங்கள் ஆலோசனைகளுக்கு செவி மடுப்பவராக அவர் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போது இந்த மன்றத்தில் இருக்கும் அமைச்சரில் அதன் பிரதிபலிப்பு இல்லை. நமது நல்லெண்ணங்கள், சட்டரீதியான உரிமைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக நமது பல்வேறு பிரகடனங்கள் ஆகியவையெல்லாம் இருந்தாலும் பல்வேறு விஷயங்களில் பாரபட்சமான அணுகுமுறையால் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த விஷயங்களுக்குள் எல்லாம் போகாமல் நமது அணுகுமுறை, நிர்வாக மற்றும் சட்டரீதியான உரிமைகள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் பற்றி இந்த மன்றத்தில் பேசவுள்ளேன்.

முதல் பிரச்சனையே எண்ணிக்கை பற்றியதுதான். மாற்றுத்திறனாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், மிகவும் குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் சரி, புள்ளிவிபரங்களைத் தொகுப்பதிலும் சரி, ஊனங்கள் குறித்த சரியான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்பதுதான் இதற்குக் காரணமாகும். அதைச் செய்வதற்காக முறையான ஏற்பாடுகளும் இல்லை. மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு அமைப்புகள் மற்றும் நடைபெற்றுவரும் இயக்கங்கள் ஆகியவற்றால் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகள் குறித்து தனியாக தகவல் சேகரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையரை நான் சந்தித்தபோது இதை அவரே என்னிடம் தெரிவித்தார். அதனால் உண்மையான நிலையைக் கிட்டத்தட்ட இந்தக் கணக்கெடுப்பு உணர்த்தும் என்று நம்புகிறேன்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 2.9 கோடி மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக அமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் அவர்களின் எண்ணிக்கை 7 கோடிக்கும் குறையாது. அதனால் முதலில் சரியான எண்ணிக்கையை கணக்கிட வேண்டும். அதன்பிறகு மற்ற விஷயங்களைக் கவனிக்கலாம். தற்போது நீங்கள் சொல்லும் எண்ணிக்கை தவறு என்றால், ஒதுக்கப்படும் நிதியின் அளவு மற்றும் அது தொடர்பான கொள்கைகள் ஆகியவையும் தவறாகவே இருக்கும்.

இரண்டாவதாக, அரசியல்சட்டத்தைப் பார்த்தால் 15(1) மற்றும் 16(2) ஆகிய பிரிவுகளில் பாரபட்சம் பற்றி நாம் குறிப்பிடும்போது இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த குடிமகனுக்கும் எதிராக பாகுபாடு காட்டக்கூடாது என்றிருக்கிறது. அதில் ஊனம் என்பதையும் சேர்க்க வேண்டும் என்று அரசியல் சட்டத்திருத்த மசோதாவை நான் கொண்டு வந்திருக்கிறேன். இதை நாம் சேர்க்காவிட்டால் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுபவர்கள் மீதான நடவடிக்கைகள் போதுமானதாக இருக்க முடியாது. அரசுகளிடமிருந்தே நான் துவங்குகிறேன். மாற்றுத்திறனாளிகளை கருணை காட்டவேண்டிய பொருட்களாகவே பொது நிறுவனங்கள் பார்க்கின்றன. நான் நவீன இந்தியாவைப் பற்றி பேசுகிறோம். துரதிருஷ்டவசமாக, மாற்றுத் திறனாளிகளுக்குள்ள சிவில் மற்றும் குடிமக்களுக்குள்ள உரிமைகள் மற்ற குடிமக்களுக்கு இணையானதாகக் கருதப்படாமல் கருணை அடிப்படையிலானதாகவே உள்ளது.

ஆனால் சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டிய யார் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? பல்வேறு பொது இடங்களில் கட்டமைப்பு ரீதியாக மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. கடைகளில் அவர்களால் நுழைய முடியாது. பேருந்துகளை அவர்கள் பயன்படுத்த இயலாது. அவர்களுக்கு உகந்ததாக இல்லாததால் மருத்துவமனைகளில் அவர்களால் நுழைய முடிவதில்லை. இதற்கெல்லாம் யாரைப் பொறுப்பாக்கப் போகிறோம்? இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைய அரசியல் சட்ட ரீதியான உத்தரவாதம் தரப்பட வேண்டும்.

நான் கூற விரும்பும் மூன்றாவது அம்சம் என்னவென்றால், இது குடிமக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் என்கிற ஐக்கிய நாடுகள் சபையின் கோட்பாட்டில் நாம் கையெழுத்திட்டுள்ளோம். ஆனால் ஊனம் என்பதை மருத்துவம் தொடர்பான பிரச்சனையாகவே நமது நாட்டில் உள்ள அனைத்து சட்டங்களும் பார்க்கின்றன. அது மருத்துவம் தொடர்பான பிரச்சனை அல்ல. இது அதற்கு நாம் தரும் விளக்கம் குறித்த பிரச்சனை. ஒருவர் எவ்வளவு பாதிக்கப்பட்டார் என்பதைக் கொண்டே நமது சட்டங்கள் மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிக்கின்றன. தற்போதுள்ள சட்டத்தில் நூற்றுக்கணக்கான திருத்தங்களைக் கொண்டு வருவதைவிட, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தனியாக சட்டம் கொண்டு வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். தனியாக சட்டம் கொண்டு வாருங்கள். ஆனால் அதன் அனைத்து அம்சங்களும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமைய வேண்டும்.

15 ஆண்டுகள் கழித்து நாம் நாடாளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அதனால், தற்போதுள்ள நிர்வாகக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். கல்வி பெறும் உரிமை என்பது வெறும் மறுவாழ்வு நடவடிக்கையாக இருக்கக்கூடாது. இதனால், கல்வி என்பது மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு மாற்றப்பட வேண்டும்.

தனது அறிக்கையில் பத்தாவது மற்றும் பதினோராவது திட்டங்களின் வழிகாட்டுதல்கள் பற்றி அமைச்சர் குறிப்பிடவேயில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று விழுக்காடு வேலைவாய்ப்பு என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதைச் செய்துவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். எவ்வளவு பேருக்கு தரப்பட்டுள்ளது என்ற விபரம் உள்ளதா? தனியார் துறையிலும் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் கூறியிருக்கிறார். அதன் விபரங்கள் என்ன? அந்த விபரங்களை அமைச்சர் தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக அனைத்து நிதிகளிலும் மூன்று விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று பதினோராவது திட்டம் கூறுகிறது. அது எங்கே உள்ளது?

எனக்குக் கிடைத்துள்ள விபரங்களின்படி, பத்தாவது மற்றும் பதினோராவது திட்டங்களில் கூறப்பட்டுள்ள இந்த மூன்று விழுக்காடு நிதி ஒதுக்கீடு நடைமுறைக்கு வரவில்லை. அது ஏன் அமலாக்கப்படவில்லை?

பாலியல் ரீதியான ஒதுக்கீடுகள் குறித்த புள்ளிவிபரங்கள் நம்மிடம் உள்ளன. அதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெரிய வேண்டும். தங்கள் உரிமைகளை மாற்றுத்திறனாளிகள் பெற்றுக்கொள்ள அரசியல்சட்ட, சட்ட மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் ஏற்பாடு மேலும் எளிமையாக்கப்பட வேண்டும். நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் தங்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுவான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

(மாற்றுத்திறனாளிகளுக்கான தனிச்சட்டம் குறித்து மாநிலங்களவையில் பிருந்தா காரத் ஆற்றிய உரையின் பகுதி)

No comments:

Post a Comment