Sunday, March 14, 2010

ஓ... மகசீயா.. ஓ.. மகசீயா...


தமிழ்ப்படம்


படத்தின் நாயகர் அழகிரி அடிக்கடி "தமிழ்... தமிழ்" என்று சொல்லியவாறு வலம் வருகிறார். "ஓ.. மகசீயா" பாடலை அவர் பாடும்போது பன்மொழிப்புலவரைப் போன்ற ஒரு பெருமிதம் முகத்தில் தெரிகிறது. பல பாத்திரங்களை ஒரே படத்தில் கொடுக்க முனைந்திருக்கிறார். இடைத்தேர்தல்கள் அடிக்கடி வருவதால் வாக்கு வித்தியாசங்களைக் கணக்கிட நிரந்தரமாக ஒரு கால்குலேட்டரை பாக்கெட்டிலேயே வைத்திருப்பது அபாரம். 2011 தேர்தலுக்குப்பிறகு அவர்கள் இருக்க மாட்டார்கள், இவர்கள் இருக்க மாட்டார்கள் என்று படம் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். தில்லிக்கு விமானம் ஏறும் சோகக்காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார்.

**********

விண்ணைத் தாண்டி வருவாயா?

விலைவாசியைச் சுற்றிதான் கதை வளைய வருகிறது. எந்த பொருளின் விலை அதிவேகமாக ஏறுகிறது என்று போட்டி நடப்பது போன்ற காட்சிகள் நகைச்சுவைக் காட்சிகளாக வைக்கப்பட்டிருந்தாலும், பார்ப்பவர்களின் வயிறையும் எரியச் செய்கிறது. துணைக்கதையாக, முரளிதியோரா, பிரணாப் காட்சிகள். இவர்தான் எண்ணெய் விலையை ஏற்றப்போகிறார் என்று எல்லோரும் தியோராவையேப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பிரணாப் அதிரடியாக விலையை ஏற்றும் காட்சி திகில்தான். தியோராவை நம்பி வசனம் பேசிய துணை நடிகர்களான கருணாநிதி மற்றும் மம்தா ஆகியோர் முழிக்கும் காட்சி சிரிப்பூட்டுகிறது.

**********

தீராத விளையாட்டுப்பிள்ளை

சண்டைக்காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. ஆன்டி-ஹீரோ என்பார்களே... அதாவது வில்லன்தான் கதைக்கு நாயகன். அதுதான் இந்தப்படம். அப்பாவிகளாகப் பார்த்து வில்லன் கூட்டம் போட்டுத்தள்ளுகிறது. கதாநாயகன் கிஷன்ஜியோ, கொலைகளை இயக்குகிறார். தொலைபேசிகளில் பேசுகிறார். "93 கொலைகளை செய்துள்ளேன். ஆனால் நான் மென்மையானவன்" என்று அவர் சொல்லும்போது தோளில் சாய்ந்திருக்கும் துப்பாக்கி நக்கலாக சிரிப்பதாக இருக்கும் கிராபிக்ஸ் காட்சி அபாரம். 25ஆம் தேதி முதல் நாங்கள் இரண்டு நாட்களுக்கு சண்டையை நிறுத்துகிறோம் என்று 29 ஆம் தேதி அவர் சொல்வதாக அமைந்துள்ள காட்சி தியேட்டரையே சிரிப்பலையில் ஆழ்த்துகிறது. படத்தின் இசைக்கு மம்தா பானர்ஜி பொறுப்பேற்றுள்ளார்.

**************
அசல்
யார் அசல் என்பதைக் கண்டுபிடிக்க படத்தைப் பார்ப்பவர்களுக்கு போட்டி வைத்து விடுகிறார்கள். மகளிருக்கு 33 விழுக்காடு மசோதா வருகிறது. இதற்கு யார் எதிரி என்பதுதான் கதை. சரத் யாதவ் தலைமறைவே ஆகி விடுகிறார். லாலு, முலயாம் ஆகியோர் வெளிப்படையாகவே மிரட்டுகிறார்கள். இவர்கள்தான் எதிரி என்று முடிவுக்கு வருவதற்குள் மசோதாவைக் கொண்டு வந்தவரே, வந்த வேகத்தில் திரும்பவும் ஓடிவிடுகிறார். ஓஹோ... இவர்கள்தான் எதிரிகள் என்பதற்குள், காட்சி மாறுகிறது. அப்பாடா... அவர்களே திரும்ப ஓடி விட்டார்கள் என்று நெஞ்சைத் தடவியவாறு நிற்கிறார் அருண் ஜெட்லி. கடைசிக்காட்சியில், வாருங்கள் பேசுவோம் என்று லாலு, முலயாம் ஆகியோரின் தோள்கள் மீது கைகளைப் போட்டவாறு அழைத்துச் செல்கிறார் மன்மோகன்சிங். மகிழ்ச்சிகரமான முடிவை வைக்கவேண்டிய கட்டாயம் இயக்குநர் சோனியா காந்திக்கு இருந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.
************
குரு சிஷ்யன்

குருவாக அத்வானியும், சிஷ்யராக நரேந்திர மோடியும் நடித்துள்ளனர். இப்ப மாநிலத்துக்குள்ளயே அடக்கி வாசிக்குற மாதிரி, நான் பொறுப்புல இருந்தப்ப இருந்துருக்கலாமேன்னு மோடியைப் பார்த்து அத்வானி கேட்பதுபோல படம் துவங்குகிறது. அனல் பறக்கும் வசனங்கள் படத்தில் உள்ளன. நான் இல்லேனா நீங்க எம்.பி.கூட கிடையாதுன்னு குருவைப் பார்த்து சொல்லும்போது சிஷ்யரின் முகத்தில் ஆக்ரோசம். அந்த காட்சியில் மோடியின் தயவில் எம்.பி. பதவி பெற்ற மற்றொருவரான அருண் ஜெட்லியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் சுஷ்மா சுவராஜ். இதைப்பற்றி யோசிக்காமல் கோட்லா மைதானம் பற்றிய கவலையில் இருக்கிறார் அருண் ஜெட்லி. இடையிடையே நகைச்சுவைக் காட்சிகள். நான் குருவும் இல்ல...எனக்கு சிஷ்யனும் இல்லனு சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசும் நிதின் கட்காரி கலகலப்பூட்டுகிறார்.
***********

3 comments: